ஹிஜாப்: தன்னம்பிக்கையின் அடையாளம்!

ஹிஜாப்: தன்னம்பிக்கையின் அடையாளம்!Hijab-a-sign-of-confidence1

இஸ்லாமிய ஆடை அடையாளம் பயங்கரவாதத்தின் சின்னமாக சித்தரிக்கப்படும் காலக்கட்டத்தில் அதே ஆடையை அணிந்த பெண்மணி புரட்சியின் சின்னமாக புகழாரம் சூட்டப்பட்டு பிரபல டைம் மாத இதழின் "பர்ஸன் ஆஃப் த இயரில்" ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். உலகில் மிகப்பெரிய கெளரவ விருதாக கருதப்படும் நோபல் பரிசை வாங்க ஹிஜாப் அணிந்த பெண்மணி மேடையில் தோன்றுகிறார். தவக்குல் கர்மான், யுவான் ரிட்லி, இன்க்ரிட் மாட்ஸன், நஜ்லா அலி மஹ்மூத், ஃபத்திமா நபீல், அஸ்மா மஃபூஸ், கமலா சுரய்யா என தொடர்கிறது ஹிஜாப் அணிந்த புரட்சி பெண்மணிகளின் எண்ணிக்கை…

மர்வா அல் ஸெர்பினி – ஹிஜாபிற்காக நவீன சுமைய்யாவாக மாறி தனது உயிரை தியாகம் செய்தவர். 2009- ஆண்டு இஸ்லாமிய ஃபோபியா வளர்த்துவிட்ட கொடியவன் ஒருவனால் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்படடார். பிரான்சு உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் முகத்தை மறைக்கும் வகையிலான நிகாபிற்கு தடைவிதித்துள்ளன.

இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 4, 2012 ஹிஜாப் தினமாக நம்மை கடந்து செல்கிறது. சர்வதேச ஹிஜாப் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் தினமாக செப்.4-ஆம் தேதியை அறிவிக்க காரணம் பிரான்சு நாட்டில் 2002 ஆம் ஆண்டு இதே தினத்தில் பள்ளிக்கூடங்களில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. உலகில் முதன்முறையாக ஹிஜாபிற்கு
தடை விதிக்கப்பட்ட நாட்டில் தான் ஹிஜாப் அணிந்த பெண்மணிக்கு அதிகாரப் பூர்வமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் முஸ்லிம் பெண்கள் மத்தியில் ஹிஜாப் அணிவது அதிகரித்து வருகிறது. ஹிஜாபின் பின்னணியில் ஆணாதிக்கம் இருப்பதாக கூறும் குற்றச்சாட்டை எல்லாம் தூக்கி வீசிவிட்டு ஹிஜாப் எங்களின் தன்னம்பிகையின் அடையாளம் என கூறும் புதிய தலைமுறை முஸ்லிம் பெண்கள் உருவாகியுள்ளார்கள்.

அண்மைக் காலமாக தமிழகத்திலும், கேரளாவிலும் ஹிஜாப் அணியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது யதார்த்தமே!

கேரளாவில் மருத்துவக் கல்லூரி ஒன்றை பார்த்த பொழுது அரபுக் கல்லூரியா? இது என்று சந்தேகம் எழுந்ததாக ஒரு எழுத்தாளர் கூறியிருந்தார். பொது சமூகத்திலும், பள்ளிக்கூடம், கல்லூரிகளிலும் முஸ்லிம் பெண்களும் அபிமானத்துடன் இன்று ஹிஜாபை அணிந்து செல்கின்றார்கள். ஹிஜாபை அணிய ஏதேனும் ஒரு கல்வி நிறுவனம் தடுத்தால் அதனை எதிர்த்து போராடும் துணிச்சலும் முஸ்லிம் பெண்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மகத்தான மாற்றமாகும். அண்மையில் கர்நாடகா மாநிலத்திலும், அதற்கு முன்பு ஆந்திராவிலும் ஹிஜாபை அணிய தடை விதித்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து அனைத்து முஸ்லிம் மாணவிகளும் வகுப்பை புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தியது சோசியல் நெட்வர்க் மீடியாக்களில் பரபரப்பான செய்தியானது.

முந்தைய காலக்கட்டங்களை விட முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேறிக் கொண்டிருப்பது ஹிஜாபின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர காரணமானது எனலாம். 'ஹிஜாப் அடிமைத்தனம்' என்றெல்லாம் புலம்பும் இஸ்லாத்தின் எதிரிகளின் கூக்குரல்கள் எல்லாம் இன்று செல்லாக் காசாக மாறிவிட்டன. இக்கருத்துக்களை தற்பொழுது முஸ்லிமல்லாதவர்களும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. இவ்வாண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஹிஜாப் அணிந்து போட்டிகளில் கலந்துகொண்ட முஸ்லிம் பெண்களின் கண்ணியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஹிஜாப் அணிந்த ஈராக் நாட்டு பெண்மணி ஷைமா அல் அவாதி இஸ்லாமோ ஃபோபியோ தலைக்கேறிய இனவெறியன் ஒருவனால் கொல்லப்பட்ட பொழுது அவருக்கு ஆதரவாக பத்து லட்சம் மாற்று மதங்களைச் சார்ந்த அமெரிக்க பெண்கள் ஹிஜாப் அணிந்து தங்களது ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தினர்.

சோசியல் மீடியாவும், தகவல் தொழில்நுட்ப த்துறையும் பெண்களின் ஹிஜாப் அணியும் உணர்விற்கு ஆக்கம் கூட்டுகின்றன. இஸ்லாமிய ஆடை அணிவதை கேவலமாக கருதிய காலம் மாறிவிட்டது. இஸ்லாத்தின் மீதான பற்றுறுதியால் பர்தா அணிந்த பெண்களை கிண்டலடிக்கும் காலமும் மலையேறிவிட்டது. ஹிஜாப் அணிந்த பெண்கள் ஏன் முகத்தை மறைக்கும் நிகாபை அணிந்த பெண்கள் கூட இன்று பல்வேறு துறைகளில் தங்களது பங்களிப்பை மிகச் சிறப்பாக ஆற்றி வருகின்றார்கள்.

ஈரான், மத்தியக் கிழக்கு நாடுகள் , இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் கல்வி கற்ற, வேலைக்குச் செல்லும் பெண்கள் ஹிஜாபை சுதந்திரமான ஆடையாகவே கருதுகின்றார்கள். எகிப்தில் புரட்சிக்கு பிறகு தொலைக்காட்சியில் செய்தி வாசித்த ஃபாத்திமா நபீல் ஸ்கார்ஃபை அணிந்துவிட்டு செய்தி வாசிக்க துவங்கியுள்ளார்.

அதேவேளையில் இதர ஆடைகளைப் போலவே ஹிஜாப் மற்றும் மஃப்தாவில் புதிய ட்ரண்டுகள் மற்றும் ஃபேஷன்கள் ஊருவியுள்ளன. இதுவும் ஹிஜாபை வெகுஜன ஆடையாக மாற்ற காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இத்தகைய ட்ரண்டுகளும், ஃபேஷன்களும் இஸ்லாம் வரையறுத்துள்ள நிபந்தனைகளை தாண்டி செல்வதால் ஹிஜாபின் உண்மையான தாத்பரியம் அங்கே வீழ்ச்சியை சந்திக்கிறது.

மஃப்தாக்கள் பலவும் இன்று தலையில் சேர்த்து கட்டப்பட்டு கழுத்து உள்ளிட்ட பகுதிகளை வெளியே தெரியும் அளவுக்கு அணியும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பிட்ட நிறத்தில் தான் ஹிஜாபை அல்லது பர்தாவை அணிய வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடவில்லை. முகம், முன்கைகள் தவிர உடலின் அனைத்துப் பகுதிகளையும் மறைக்க கூடிய உடலுறுப்புகளை வெளியே காண்பிக்காத இறுக்கம் இல்லாத ஆடையாக இருக்கவேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிபந்தனை. ஆகவே ஹிஜாபை அணியும் முஸ்லிம் சகோதரிகள் அதன் நோக்கம் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நோபல் பரிசுப் பெற்ற யெமன் நாட்டின் தவக்குல் கர்மானிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வியொன்றை எழுப்பினார், "ஏன் நீங்கள் ஹிஜாபை அணிகின்றீர்கள்? அது எவ்வாறு உங்களுடைய கல்விக்கும், அறிவுக்கும் பொருந்துகிறது?" என்று.

தவக்குல் கர்மான் இவ்வாறு பதிலளித்தார்: "ஆதி மனிதர்கள் நிர்வாணமாக இருந்தார்கள். அவர்களுடைய அறிவு வளர்ச்சி அடைந்த பொழுது ஆடையை அணியத் துவங்கினார்கள். நானும், எனது ஆடை முறையும் பிரதிபலிப்பது மனிதன் பெற்ற மிகவும் உன்னதமான கலாச்சாரத்தை ஆகும். மனிதன் மீண்டும் நிர்வாணமாக மாறுவது அவன் தனது துவக்க காலத்தை நோக்கி செல்வதன் அடையாளமாகும்." என்றார்.

இங்கு நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவுக் கூறுவது சாலச்சிறந்தது.

அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறுகிறார்: இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர்.

இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார்.

நபி(ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி ) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
நூல்: புஹாரி

ஆகவே ஹிஜாபை பெண்களுக்கு கண்ணியத்தை வழங்கும், இஸ்லாத்தின் உன்னத கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஆடையாக கருதுவோம்! நுகர்வுக் கலாச்சாரத்தின் புதிய பரிணாமங்களில் சிக்கி ஹிஜாபின் வரைவிலக்கணத்திற்கு விடைக்கொடுத்து விட வேண்டாம்.



--
Please Log on to

Thanks n Rgds

Zaman

* Drink or Eat only by Right Hand.
* Help Poor as Much as Possible.
* Worship the Creator, Not His creations.
* Dhikr Allah Everyday Morning & Evening.
* Read Quran Regular Basis with Translation
* Pray Promptly and Guide others to Pray also.
* Reach Islamic Messages to Everyone,It's Our Duty.
* Use your Mobile Phone on Your Left Ear -Health Alert.
* Please Don't Waste Water and Food in Your Daily Life.

Post a Comment

0 Comments