வட்டி 'சமுதாயத்தின் சாபக்கேடு'


வட்டி
'சமுதாயத்தின் சாபக்கேடு'
முன்னுரை:
   
சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும். உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான வர்த்தகமேயாகும்.
பல குடும்பங்கள் அழிந்து போனதற்கும் வட்டியே முதற்க் காரணமாகும்.
 
இஸ்லாம் வட்டியை முற்றாக தடை செய்கிறது. அவற்றை தெரிந்து கொண்டு நமது வாழ்வில் கடைபிடிப்பது அவசியமாகும்.
 
1. வட்டி என்றால் என்ன?:
   
அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது.
   
'...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279)
   
இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை இறைவன் தனது திருமறையில் சொல்கிறான்.
'
ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130)
 
2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு:
   
வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது.
   
 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275)
   
வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.
   
1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது.
   
2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும்.
   
3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூடுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும்.
 
3. வட்டி ஒரு பெரும் பாவம் :
   
'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் இறைவனின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது,
 
'1.இறைவனுக்கு இணை வைப்பது. (இறைவனை விட்டு விட்டு  மற்றவற்றை இறைவனாக வணங்குவது)
2.சூனியம்.
3.கொலை
4.வட்டி உண்பது
5.அனாதைகளின் சொத்தை உண்பது
6.போரில் புறமுதுகு காட்டுவது
7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள்.
 
(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
 
4. வட்டி ஒரு கொடிய குற்றம் :
   
 'ஒரு திர்ஹம் (ரூபாய்) வட்டி என்பது இறைவனிடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்'
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ)
   
மற்றொரு அறிவிப்பில்,
   
 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (விபச்சாரம் செய்ய) போவதைப் போன்றது'
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
   
ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது.
விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
   
விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன்.
 
5. இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் :
   
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் இறைவன் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
 
6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை:
   
1. நிரந்தர நரகம்.
   
இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085)
   
2. நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள்.
 
1. கொலையாளி,
2. இறைவனை  ஏற்க்காமல் நிராகரிப்பவர்கள். ( இறைவனல்லாத   மற்றவற்றை இறைவனாக வணங்குபவர்கள் )
3. வட்டி உண்பவர்.
   
ஏனைய பாவங்களை இறைவன் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான்.
 
7. போர்ப் பிரகடணம்:
   
வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் இறைவனும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை இறைவன் திருமறையில் சொல்கிறான்.
   
 'இறைநம்பிக்கை(ஈமான்) கொண்டவர்களே! நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாக (முஃமின்களாக) இருந்தால் இறைவனுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் இறைவனிடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
   
இறைவனும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள்.
 
8. வட்டி வாங்குவோரின் அவல நிலை :
   
1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான்.
    'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275)
   
2. நபி (ஸல்) அவர்களின் சாபம்.
    'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962)
   
3. இறைவனின் சாபம்.
    'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் இறைவன்   சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
   
4. போர் பிரகடணம்.
    'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் இறைவனுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் இறைவனிடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
 
9. அடமானம்: (For eg. Gold)
   
அடமானம் இரண்டு வகைப்படும்.
அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார்.
இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார்.
   
இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன.
   
முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும்.
   
நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்)
   
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
   
வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும்.
அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும்.
   
 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
 
10. ஒத்தி வட்டியா?: (Lease)
   
ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும்.
   
ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.
   
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
 
11. பேங்க்கில் பணம் போடலாமா? : (Bank Interest)
   
வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம்.
முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது.
இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. (Fixed Deposit)
   
இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது.
   
இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை இறைவனும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது.
   
இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும்.
 
12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?:
   
ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும்.
   
இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும்.
 
13. குலுக்கல் சீட்டு:
   
குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது.
அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே.
 
14. தவணை முறையில் பொருள் வாங்குவது: (Insalment)
   
இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு.
ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று.
   
இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த
தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது.
 
15. வங்கியில் வேலை செய்வது: (Work in Bank)
   
'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் இறைவன் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
 
16. பகடி கூடுமா?:
   
பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார்.
பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது.
 
17. முடிவுரை:
   
பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை இறைவன் காப்பாற்றுவானாக!
 
 
إنما الأعمال بالنيات
"The reward of deeds depends upon the intentions"

--
Please Log on to

Thanks n Rgds

Zaman

* Drink or Eat only by Right Hand.
* Help Poor as Much as Possible.
* Worship the Creator, Not His creations.
* Dhikr Allah Everyday Morning & Evening.
* Read Quran Regular Basis with Translation
* Pray Promptly and Guide others to Pray also.
* Reach Islamic Messages to Everyone,It's Our Duty.
* Use your Mobile Phone on Your Left Ear -Health Alert.
* Please Don't Waste Water and Food in Your Daily Life.

Post a Comment

0 Comments