நரகத்தில் சேர்க்கும் சலவாத்து நாரியா


நரகத்தில் சேர்க்கும் சலவாத்து நாரியா 

தமிழக முஸ்லிம்கள் சிலரிடம் ஸலவாத்துன்னாரியா என்ற ஸலவாத்தை ஓதும் நடைமுறை இருந்து வருகிறது. அதாவது 4444 தடவை இந்த ஸலவாத்தை ஓதினால் ஏழைகள் பணக்காரர்களாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இது ஓதப்பட்டு வருகிறது. இந்த ஸலவாத்தின் வாசகங்கள் பெரிதாக உள்ளதால் இதை அனைவரும் மனனம் செய்திருப்பதில்லை. மேலும் 4444 தடவை ஒருவர் இதை ஓதினால் இதற்காகப் பல நாட்களை ஒதுக்க வேண்டிவரும். இதனால் ஆலிம்களை அழைத்து அவர்களுக்கு உரிய(?) கட்டணம் கொடுத்து ஓதச் செய்யப்படுகிறது.

இது மார்க்கத்தில் உள்ளதா என்பதை நாம் அறிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.தவறான கருத்துக்களை உள்ளடக்கியது

ஸலவாதுன்னாரியா எனப்படும் இந்த ஸலவாத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் வந்த சில அறிவீனர்களால் உண்டாக்கப்பட்டதால் இதில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தகர்க்கும் கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன.

இந்த ஸலவாத்துக்குப் பெயர் வைத்தவர்கள் அதில் மட்டும் உண்மையாளர்களாக உள்ளனர். நார் என்றால் நெருப்பு, நரகம் என்று பொருள். ஸலவாதுன்னாரிய்யா என்றால் நரகில் சேர்க்கும் ஸலவாத் என்பது பொருள். இதை ஓதுவதால் நரகம் தான் கிடைக்கும் என்று பொருத்தமாகப் பெயர் வைத்துள்ளனர்.

اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك

அல்லாஹும்ம ஸல்லி ஸலாத்தன் காமிலத்தன், வஸல்லிம் ஸலாமன் தாம்மன், அலா ஸய்யிதினா முஹம்மதின், அல்லதீ தன்ஹல்லு பிஹில் உகத். வதன்ஃபரிஜு பிஹில் குரப். வதுக்லா பிஹில் ஹவாயிஜ். வதுனாலு பிஹிர் ரகாயிபு. வஹுஸ்னுல் ஹவாதிம். வயுஸ்தஸ்கல் கமாமு பிவஜ்ஹிஹில் கரீம். வஅலா ஆலிஹி வஸஹ்பிஹி ஃபீ குல்லி லம்ஹத்தின் நஃபசின் பி அததி குல்லி மஃலூமின் லக்க

இது தான் ஸலவாத்துன்னாரியா என்பது. இதன் பொருள் வருமாறு:

பொருள்: அல்லாஹ்வே! எங்களுடைய தலைவரான முஹம்மது அவர்கள் மீதும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் மீதும் ஒவ்வொரு கண் சிமிட்டும் மற்றும் சுவாசிக்கும் நேரமும் உன்னால் அறியப்பட்ட அனைத்து எண்ணிக்கை அளவிற்குப் பரிபூரண அருளையும் முழுமையான சாந்தியையும் பொழிவாயாக! அந்த முஹம்மத் எப்படிப்பட்டவரென்றால் அவர் மூலமாகத் தான் சிக்கல்கள் அவிழ்கின்றன. அவர் மூலம் தான் துன்பங்கள் நீங்குகின்றன. அவர் மூலம் தான் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அவர் மூலம் தான் நாட்டங்களும் அழகிய இறுதி முடிவும் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. அவருடைய திருமுகத்தின் மூலம் தான் மேகத்திலிருந்து மழை பெறப்படுகிறது.

துன்பங்களை நீக்குபவன் யார்?

அனைத்துத் துன்பங்களிலிருந்தும் காக்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் தான். அவனைத் தவிர இந்த ஆற்றல் வேறு யாருக்கும் அணுவின் முனையளவு கூட கிடையாது. ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான்.
அல்குர்ஆன் 6:64

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாக இருந்தாலும் தமக்கோ, மற்றவர்களுக்கோ எவ்வித உதவியும் செய்ய முடியாது என்பதைத் திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.

'
அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன் 7:188

'
நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன்' என (முஹம்மதே!) கூறுவீராக! 'நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக! அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்' என்றும் கூறுவீராக!
அல்குர்ஆன் 72:20, 21, 22 
நாட்டங்களை நிறைவேற்றுபவன் யார்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், முனாஃபிக்குகளின் தலைவனாகிய அப்துல்லாஹ் பின் உபை பின் ஸலூல் என்பவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என விரும்பினார்கள். ஆனால் அது நிறைவேறாதது மட்டுமல்லாமல் அல்லாஹ், அதை மன்னிக்கவே மாட்டேன் என்று திருமறை வசனத்தையும் அருளினான்.

(
முஹம்மதே!) அவர்களுக்காக பாவ மன்னிப்புக் கேளும்! அல்லது கேட்காமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்குக் காரணம். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
அல் குர்ஆன் 9:80

நபியவர்கள் தம்முடைய சிறிய தந்தையாகிய அபூ தாலிப், ஏகத்துவக் கொள்கையை ஏற்க வேண்டும் என விரும்பினார்கள். அவர்களுடைய மரணத் தருவாயில் அவர்களிடம் லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவைக் கூறுமாறு மன்றாடினார்கள். அவர்கள் கலிமாவை மொழியாமல் மரணித்த பிறகும் அல்லாஹ் தடுக்கின்ற வரை பாவ மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருப்பேன் என்றார்கள்.

ஆனால் அவர்களின் இந்த மாபெரும் நாட்டத்தை இறைவன் நிறைவேற்றவில்லை. மாறாக, நபிக்கு நாடியதைச் செய்யும் ஆற்றல் கிடையாது என்பதை இது தொடர்பாக இறங்கிய வசனத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறான்.

(
முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 28:56 

அழகிய இறுதி முடிவை தருபவன் யார்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களைப் படைத்து விட்டான்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 5175

மேலும் நபியவர்கள் மூலம் அழகிய முடிவு ஏற்படுகிறதென்றால் அவர்கள் விரும்பிய அபூ தாலிப், அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற இன்னும் பலர் முஸ்லிம்களாக மரணித்திருக்க வேண்டும். அவர்கள் ஏன் காஃபிர்களாக மரணித்தார்கள்? இதைச் சிந்தித்தாலே மேற்கண்ட வரிகளை ஓதினால் நாம் நிரந்தர நரகத்தைத் தான் சென்றடைவோம் என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

மழை பொழிவிப்பவன் யார்?

ஸலவாத்துன்னாரிய்யா எனும் நரகத்து ஸலவாத்தில் நபியவர்களின் திருமுகத்தின் மூலம் தான் மேகத்திலிருந்து மழை பெறப்படுகிறது என்று வருகிறது. இந்த வரிகளும் இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற, நிரந்தர நரகத்தில் சேர்க்கின்ற வரிகளாகும்.

மழையைப் பொழிவிக்கின்ற ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நன்றி செலுத்த மாட்டீர்களா?
அல்குர்ஆன் 56:68, 69, 70

அவர்கள் நம்பிக்கையிழந்த பின் அவனே மழையை இறக்குகிறான். தனது அருளையும் பரவச் செய்கிறான். அவன் பாதுகாவலன்; புகழுக்குரியவன்.

அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் இந்த ஸலாத்துந் நாரிய்யாவை விட்டு விட்டு, அவனது அருளை அள்ளித் தரும் ஸலவாத்தைக் கூறுவோம். அளப்பரிய நன்மைகளை அடைவோம்.

With Love
Badr Zaman

Post a Comment

1 Comments

போடா கூறு கெட்ட குமாரு...