அழைக்கிறது கனடா



வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள், கனடா நாட்டுக்குப் படையெடுப்பது சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. அதற்கு என்ன காரணம்?


வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் இன்றைய இளைஞர்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. தாய் நாட்டில் பள்ளிப் படிப்பையோ அல்லது இளநிலைப் பட்டப் படிப்பையோ முடித்தவுடன், வெளிநாடு சென்று உயர்கல்வி கற்று வந்தால், நல்ல வேலைவாய்ப்புக் கிடைப்பதுடன், தாய் நாட்டிலும் அதிக சம்பளத்தில் பெரிய நிறுவனங்களில் பணியாற்ற முடியும் என்ற எண்ணம் வேரூன்றியிருக்கிறது.

வெளிநாட்டுப் படிப்பு என்றால், அமெரிக்கா, இங்கிலாந்து சென்று கல்வி கற்பது மட்டுமே என்றிருந்த நிலை மாறி, தற்போது சிங்கப்பூர், கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா என்று நிறைய நாடுகள், உயர் கல்வி படிக்க, தங்கள் நாட்டுக்கு வரும்படி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றன.

அந்த வகையில் கனடா நாட்டில் மேற்படிப்பு படிக்க இளைஞர்கள் பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். தரமான கல்வி, உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி வசதிகள், புகழ்பெற்ற நிபுணர்கள் ஆசிரியர்களாக இருப்பது, கற்பதற்கேற்ற இணக்கமான சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால், கனடா நாட்டில் கல்வி கற்பதை இன்றைய இளைஞர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுடன் ஒப்பிடுகையில், அங்கு படிப்பதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு. அத்துடன் படிக்கும்போதே பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ வேலை பார்த்து பொருளீட்ட முடியும் என்பதும் சாதகமான அம்சங்கள்.

கனடாவிலுள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களும் கடைப்பிடிக்கும் குறிப்பிடத்தக்க விஷயம், அங்கு நிலவும் கூட்டுறவுக் கல்வித் திட்டம். அதாவது, முழு நேரப் படிப்புக்குப் பிறகு, பல்கலைக்கழகங்களும், தொழிற்சாலைகளும் இணைந்து பிளேஸ்மெண்ட் அடிப்படையில் மாணவர்களுக்கு முழு நேர வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன. இதனால், படிப்புக்கேற்ற வேலை அனுபவம் பெறவும், அதன் மூலம் வருவாய் ஈட்டவும் முடியும்.

மருத்துவம், பொறியியல், நிர்வாகம், பயோ சயின்சஸ், கம்யூனிக்கேஷன், ஏரோஸ்பேஸ்... என்ற ஏகப்பட்ட படிப்புகள் கனடா நாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்றுத் தரப்படுகின்றன.

“கனடா நாட்டில் பகுதி நேர வேலை பார்ப்பதில் சட்டச் சிக்கல்கள் ஏதும் இல்லை. அத்துடன் வெளிநாட்டிலிருந்து செல்லும் மாணவர்கள் தங்கள் நாட்டில் வேலை பார்த்து முன் அனுபவம் பெற்றவர்களாக இருந்தால், அதற்கு கனடா நாட்டில் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்” என்கிறார், தமிழகத்தில் வேலை பார்த்து மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ள அருணா. இவர், கனடா நாட்டில் மேற்படிப்பைத் தொடரத் திட்டமிட்டுள்ளார்.

வின்ட்ஸர் பல்கலைக்கழகம், குல்ப் பல்கலைக் கழகம், செயின்ட் மேரீஸ் பல்கலைக்கழகம், அல்கோமா பல்கலைக்கழகம், விக்டோரியா பல்கலைக்கழகம், வின்னிபெக் பல்கலைக்கழகம் உள்ளிட்ட புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் கனடாவில் உள்ளன.

கனடா நாட்டுப் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் இளநிலைப் பட்டப் படிப்பு படிக்க வேண்டுமானால், ஆண்டுக்கு ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் வரையும், என்ஜினீயரிங் இளநிலைப் பட்டப் படிப்புக்கு ரூ.10 லட்சத்து 85 ஆயிரம் வரையும் செலவு பிடிக்கும். இது டியூஷன் கட்டணம் மட்டுமே. புத்தகங்கள், தங்குமிடம், உணவுக்குத் தனி. கால்நடை மருத்துவம் படிக்க ரூ.25 லட்சம் செலவாகும். இந்தக் கட்டணங்கள் எல்லாம்  உத்தேசமானதுதான். படிப்புச் செலவு, தங்குமிடம், உணவுக்கு ஆகும் செலவு விவரங்களை தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கனடாவில் பிரெஞ்ச் மற்றும் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருப்பதால், இங்கு படிக்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்புக்குப் பிறகு இரு மொழிகளிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர்களாகத் திரும்பி வருகிறார்கள்.

6 மாதங்களுக்கு மேலாக கனடாவில் படிக்க விரும்பும் மாணவர்கள் கட்டாயமாக ஸ்டடி பர்மிட் எனப்படும் படிக்க அனுமதி தரும் ஆவணத்தைப் பெறுவது கட்டாயம். எந்தக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளதோ அந்தக் கல்லூரி வழங்கிய அதிகாரப்பூர்வமான கடிதத்துடன், கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்த தங்களிடம் இருக்கும் நிதி வசதியைக் குறிக்கும் வங்கி ஸ்டேட்மெண்ட் போன்ற பிற ஆவணங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். கனடா நாட்டில் படிக்கச் செல்வதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே ஸ்டடி பர்மிட்டைப் பெற வேண்டும்.

கனடாவில் படிக்க விரும்புகிறவர்கள், உலகம் முழுவதிலும் உள்ள கனடா பல்கலைக்கழக விண்ணப்ப (The Canadian University Application Centre - CUAC) மையத்தை அணுகலாம். தென்னிந்தியாவில் இதன் அலுவலகம் ஹைதராபாத்தில் உள்ளது. 2001-ஆம் ஆண்டிலிருந்து சுமார் 2 ஆயிரம் இந்திய  மாணவர்கள், இந்த அலுவலகத்தின் மூலமாக கனடா நாட்டுப்பல்கலைக்கழகங்களுக்கு படிக்கச் சென்றுள்ளார்கள். நீங்கள் எந்தப் படிப்புக்காக கனடா செல்ல விரும்புகிறீர்கள், அங்குள்ள படிப்புகள் என்னென்ன போன்ற அனைத்து வழிகாட்டுதல்களையும் அவர்கள் இலவசமாகவே அளிப்பார்கள்.

விவரங்களுக்கு:

The Canadian University Application Centre,
609, Ashoka Bhopal Chambers,
S.P. Road, Secunderabad, Hyderabad.
Website: www.cananda 123.org
கனடா நாட்டில் படிப்பு தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ள :
www.educationauincanada.ca

Badr Zaman

Post a Comment

0 Comments