சவுதியில் இருந்து இந்திய விசா "ஆன்-லைன்' மூலம் பெறலாம்




சவுதியில் இருந்து இந்திய விசா "ஆன்-லைன்' மூலம் பெறலாம்

சவுதியில் இருந்து இந்தியா வருவதற்கான விசா பெறுவதற்கான வழிமுறை, மேலும் எளிதாக்கப்பட்டிருக்கிறது. 

கடந்த 17ம் தேதி முதல், இந்தியாவுக்கான விசா விண்ணப்பத்தை, கணினி மூலமாகவே பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டவர் இந்தியா வருவதற்கான விசா நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், விசா விண்ணப்பங்கள், "ஆன்-லைனில்' கிடைக்க வழிவகை செய்யப்படும் என, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. கடந்த அக்டோபர் 18ம் தேதி, ஐக்கிய அரபு நாடுகளுக்கான இந்தியத் தூதரகம், சுற்றுலா மற்றும் பயண விசாக்களை "ஆன்-லைன்' மூலம் பெறலாம் என அறிவித்தது.
இதையடுத்து, சவுதியின் ஜெட்டா நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில், "ஆன்-லைன்' மூலம், விசா விண்ணப்பம் பெறும் வசதி நிறுவப்பட்டுள்ளது. இம்மாதம் 17ம்தேதி முதல், ஜெட்டாவில் இருந்து இந்தியாவுக்கான விசாக்களை "ஆன்-லைன்' மூலமாகவே பெற முடியும். எனினும், இந்தியாவுக்கான விசாவை, "ஆன்-லைனில்' மட்டுமே பதிய முடியும் என்ற கட்டாய விதி, அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் தான் அமலுக்கு வருகிறது. அதுவரை, "ஆன்-லைன்' மற்றும் தற்போதைய முறை என, இரு வழிகளிலும் விசா பெறலாம்.
இதுகுறித்து, சவுதியின் இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இணையதளத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களைப் பதிவு செய்து கொண்டு, விசா விண்ணப்பத்தை நிரப்பி, அதை இணையத்திலேயே சமர்ப்பிக்க வேண்டும்.
பின், அதன் அச்சுப் பிரதி ஒன்றை எடுத்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட விசா ஏஜென்சியை அணுகி, தங்களின், விசா விண்ணப்பப் பிரதி, பாஸ்போர்ட், இரண்டு புகைப்படங்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவுதிக்கான இத்திட்டத்தை அடுத்து, விரைவில், உலகம் முழுவதிலும் உள்ள இந்தியத் தூதரகங்களில், "ஆன்-லைன்' விசா விண்ணப்பம் பெறும் வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம் வெளிநாட்டவர் மிக விரைவில் இந்திய விசா பெற முடியும்.

Post a Comment

0 Comments